சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
பெரியாழ்வார் திருமொழி  

Songs from 13.0 to 473.0   ( திருவில்லிபுத்தூர் )
Pages:    Previous   1  2  3  4  5  6  7  8  9  10    Next  Next 10
கன்றுகள் இல்லம் புகுந்து
      கதறுகின்ற பசு எல்லாம்
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி
      நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப் போது
      மதிற் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என்தன் சொல்லு
      நான் உன்னைக் காப்பிட வாராய்



[193.0]
செப்பு ஓது மென்முலையார்கள்
      சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய்
      அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப் போதும் வானவர் ஏத்தும்
      முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன்
      எம்பிரான் காப்பிட வாராய்



[194.0]
கண்ணில் மணல்கொடு தூவிக்
      காலினால் பாய்ந்தனை என்று என்று
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு
      -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய்
      கண்டாரொடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய்
      வள்ளலே காப்பிட வாராய்



[195.0]
Back to Top
பல்லாயிரவர் இவ் ஊரில்
      பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது
      எம்பிரான் நீ இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்
      ஞானச் சுடரே உன்மேனி
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்
      சொப்படக் காப்பிட வாராய்



[196.0]
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்
      கரு நிறச் செம் மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான்
      என்பது ஓர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ் மணி மாட
      மதிற் திருவெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க
      அழகனே காப்பிட வாராய்




[197.0]
கள்ளச் சகடும் மருதும்
      கலக்கு அழிய உதைசெய்த
பிள்ளையரசே நீ பேயைப்
      பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன்
      ஒளியுடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இது ஆகும்
      பரமனே காப்பிட வாராய்



[198.0]
இன்பம் அதனை உயர்த்தாய்
      இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறு அட்ட கோவே
      கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே
செம்பொன் மதில் வெள்ளறையாய்
      செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்கு
      கடிது ஓடிக் காப்பிட வாராய்



[199.0]
இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு
      எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று
      தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த
      தேசு உடை வெள்ளறை நின்றாய்
உருக் காட்டும் அந்தி விளக்கு இன்று
      ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்



[200.0]
Back to Top
போது அமர் செல்வக்கொழுந்து புணர் திருவெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே



[201.0]
வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை
      வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்
      காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்
புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை
      புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற
      அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய்



[202.0]
வருக வருக வருக இங்கே
      வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம்
      காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்
      அஞ்சனவண்ணா அசலகத்தார்
பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்
      பாவியேனுக்கு இங்கே போதராயே



[203.0]
திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு
      தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்
      உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம்
      செய்வதுதான் வழக்கோ? அசோதாய்
வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்
      வாழ ஒட்டான் மதுசூதனனே



[204.0]
கொண்டல்வண்ணா இங்கே போதராயே
      கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த
      திருநாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி
      ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்
      கண்ணபிரான் கற்ற கல்வி தானே



[205.0]
Back to Top
பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்
      பல்வளையாள் என்மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச்
      சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி
      சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய
      அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய்



[206.0]
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்
      போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார்
      ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்
கோதுகலம் உடைக்குட்டனேயோ
      குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா
வேதப் பொருளே என் வேங்கடவா
      வித்தகனே இங்கே போதராயே



[207.0]
செந்நெல் அரிசி சிறு பருப்புச்
      செய்த அக்காரம் நறுநெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்
      பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி
      எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன்மகன் தன்னை அசோதை நங்காய்
      கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே



[208.0]
கேசவனே இங்கே போதராயே
      கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இலாதார் அகத்து இருந்து
      நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்
      தொண்டரும் நின்ற இடத்தில் நின்று
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்
      தாமோதரா இங்கே போதராயே



[209.0]
கன்னல் இலட்டுவத்தோடு சீடை
      காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்
      இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்
      பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன்மகன் தன்னை அசோதை நங்காய்
      கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே



[210.0]
Back to Top
சொல்லில் அரசிப் படுதி நங்காய்
      சூழல் உடையன் உன்பிள்ளை தானே
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்
      கையில் வளையைக் கழற்றிக்கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற
      அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு
      நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே



[211.0]
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வருபுனற் காவிரித் தென்னரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணையடி என்தலை மேலனவே



[212.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song